Tuesday, May 22, 2012

தமிழனுக்குக் கடவுளே இல்லை!


இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.

வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்றும் சொன்னான். அந்தக் கடவுளைக் காட்டு மனிதன் சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை. காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள். குடி இருக்கிற இடமோ சுடுகாடு. கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக் கூடிய யோக்கியதையா? இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா? வெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்குக் கடவுளை உண்டு பண்ணினான்.

வெள்ளைக்காரன் கடவுள் ஜுபிடர்; பார்ப்பான் அதற்கு கொடுத்த பெயர் இந்திரன். வெள்ளைக்காரன் - மைனாஸ்; பார்ப்பான் வைத்த பெயர் எமன். வெள்ளைக்காரன் - நெப்டியூன்; பார்ப்பான் - வருணன். வெள்ளைக்காரன் - லூனஸ்; பார்ப்பான் - சந்திரன். வெள்ளைக்காரன் - சைனேஸ்; பார்ப்பான் - வாயு. வெள்ளைக்காரன் - அப்பல்லோ; பார்ப்பான் - கிருஷ்ணன். வெள்ளைக்காரன் - மெர்குரி; பார்ப்பான் - நாரதன். வெள்ளைக் காரன் - மார்ஸ்; பார்ப்பான் - கந்தன்.

இப்படியாக வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பி அடித்தவன்தான் இந்தப் பார்ப்பான். அப்படிக் காப்பி அடித்த கடவுள்களுக்கும் கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி, பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான். அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.அப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது.

கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது - கைக்குச் சிக்காது புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படிக் கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவுளை வைத்து இருக்கிறான். கிறித்துவனும், துலுக்கனும் அதைத்தான் சொல்கிறான். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்?

கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவை எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு? கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா? எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன்.

கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா? விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது!இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம். பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.

இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்தப் பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும்? நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா? துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும். இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம்? நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது? வெட்கப்பட வேண்டாமா?

எங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால், இந்தக் கடவுளைச் செருப்பாலடித்து, சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால், நமக்குப் படிப்பு ஏது? உத்தியோகம் ஏது? இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாக இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே! இது எப்படி வந்தது? நம்முடைய முயற்சியால் அல்லவா?

(29.08.1973 அன்று சிதம்பரத்தில் விநாயக சதுர்த்தி கண்டனப் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)

Monday, May 21, 2012

அகிம்சையை பேசியே நாசமாய் போய்விட்டோம்!


தாய்மார்களே! தோழர்களே!

அகிம்சை என்பதைப் பற்றிக் கேட்டால் அது கோழைத்தனம் என்பேன். பழங்காலத்தில் அது பொருத்தமாக இருந்திருக்கலாம். அதை இப்போது ஏற்று அதன்படி நடப்பதென்பது சாத்தியம் இல்லை. அகிம்சை பிரயோசனப்படாது. இப்போது ஏதோ மற்றவர்களைக் கோழையாக்கி, அடக்கித் தாங்கள் வாழ - தந்திரக்காரர்கள் அகிம்சை என்று பேசுகிறார்கள். அகிம்சை என்பது ‘தெய்வீகக்’ கருத்தின் பேரில் சொன்ன உபதேசம். முதலில் நம் நாட்டில் அகிம்சையைப் பற்றிப் பேசியவர்கள் பவுத்தர்கள், சமணர்கள். இரண்டாவது, மேல் நாட்டில் ஏசுபிரான் பேசினார். அதற்குப் பிறகு யாரும் பேசவில்லை.

சமணர்கள் நடைமுறைகளைப் பார்த்தால் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். சமணர்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டார்கள்; தலையில் பேன் பிடித்தால் பேனைக் கொல்ல வேண்டி வரும் என்பதற்காகவே மொட்டையடித்துக் கொண்டார்கள். கையில் மயில் தோகையை வைத்து முன்னால் கூட்டிக் கொண்டு நடக்கவேண்டும்; விளக்குமாற்றால் கூட்டக்கூடாது, விளக்குமாற்றால் கூட்டினால் எறும்பு, பூச்சிகள் செத்துவிடும். இப்படியெல்லாம் என்னென்னமோ செய்து அகிம்சையைப் பற்றிப் பெருத்த உபதேசம் செய்தார்கள். பலன் என்ன? அவர்களுடைய தலைகள் பனங்காயாட்டம் வெட்டப்பட்டன. இதைக் கொண்டாட இன்னும் பண்டிகை நடக்கிறது. ‘அன்பே சிவம்’; ‘சிவமே அன்பு’ என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

இவர்கள்தான் ஆயிரம், பதினாயிரம் என்று சமணர்களை வெட்டிச் சாய்த்தார்கள். எதற்குச் சொல்கிறேன் என்றால், சமணர்கள் பேசிவந்த அகிம்சை அவர்களுக்குப் பயன்படவில்லை என்பதைக் காட்டத்தான். அகிம்சை பேசியதன் காரணமாகவே சமணர்கள் அழிக்கப்பட்டார்கள். பலன் என்ன? ஏசு, ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மற்றொரு கன்னத்தைத் திருப்பிக் காட்டு’ என்று சொன்னார். இன்று அதுபோல் நடந்தால், பல் போய்விடும். ‘மேல் வேட்டியைக் கேட்டால் இடுப்பு வேட்டியையுங் கொடு’ என்று சொன்னார். இப்போது அப்படிச் செய்தால், என்ன ஆகும்? எல்லோரும் நிர்வாண சங்கத்தில் தான் சேரவேண்டும்.

இன்றைக்கு அந்த கிறிஸ்தவர்கள் தான் வெடிகுண்டு, அணுகுண்டு செய்கிறார்கள். இம்சை செய்வதற்கு என்பதல்ல; எதிரியிடம் ஓர் அணுகுண்டு இருக்கும்போது என்னிடமும் 2, 3 இருக்கிறது என்று சொன்னால்தான், தான் தப்பிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. நாம் அகிம்சையை நம்பிப் பேசி நாசமாய்ப் போய் விட்டோம், இல்லாவிட்டால் 3000 - வருடங்களாக தேவடியாள் மகன், சூத்திரன் என்று நம்மை இழிவு செய்கிறபோது இங்கு ஒரே ஒரு பார்ப்பாரக் குஞ்சு இருக்குமா? இது ரொம்பக் கேடு.

உலகத்தில் வேறு எந்த ஜீவனும் தன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு ஜீவனை அடித்துச் சாப்பிடுவதில்லை. மனிதன்தான் தன் இனத்தையே அடிப்பது, கொல்வது, சதி செய்து வாழ்வது எல்லாம். மனிதனை மனிதன் கொலை செய்வது எவ்வளவு? மனிதனை மனிதன் கொடுமைப்படுத்துவதைக் காணமுடியுமே தவிர, மாடு மாட்டைக் கடித்தது, நரி நரியைக் கொன்றது, மான் மானை அடித்தது என்று காணமுடியாது. மனிதனை மனிதன் வஞ்சிப்பது, கொடுமைப்படுத்துவது, வதைப்பது வளர்ந்துவிட்டது. ஆகையினால் நமக்கு அவசியம் கத்தி வேண்டும். அரசர்களை எடுத்துக் கொண்டாலும் எந்த அரசன் கையில் கத்தி இல்லாமல் இருந்தான்? முதலாவது செங்கோல் தடி; இரண்டாவது உடைவாள்; இவை இல்லாத அரசனே கிடையாது. கத்தியும் கழுவுமே சைவத்தைக் காப்பாற்றின.

கடவுளை எடுத்துக் கொண்டாலும், எந்தக் கடவுள் ஆயுதம் இல்லாமல் இருக்கிறது? குழவிக்கல் மாதிரியான இலிங்கம் தவிர, உருவமாகக் காட்டுகிற சிவனுக்கெல்லாம், கையில் கொழு, மழு, கோடரி, அரிவாள், ஈட்டி, வேல், சூலாயுதம், அப்புறம் கொஞ்சம் பக்குவப்பட்ட பிறகு திரிசூல ஆயுதம், அதற்குமேல் பக்குவ மேற்பட்ட பின் வில், சக்கரம் இப்படியாக உள்ளனவே. அகிம்சை எங்கே போகிறது? பேரோ, சைவக் கடவுள் - அதற்குக் கத்தியும், கொழுவும், மழுவும் ஆயுதம், ஆயுதம் இல்லாவிட்டால் ஏது சைவம்? சமணர்களை வெட்டி, குத்தி, கழுவில் ஏற்றித் தீர்த்த பிறகுதானே சைவம் மிஞ்சிற்று? சமணர்களிடம் ஆயுதம் இல்லாத காரணத்தாலேயே சமணம் அழிந்தது. சைவம் ஆயுதத்தினாலேயே மிஞ்சிற்று. ‘சைவம்’, ‘அன்பு’ என்பதெல்லாம் தாசியின் காதல் போன்றதே.

--திருச்சியில் 1956-ல் தந்தை பெரியாரின் சொற்பொழிவு, (‘விடுதலை’,25.10.1956)

Tuesday, May 8, 2012

மதம் என்ற ஒன்று தேவைதானா ?

மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்கள் சண்டைகள், போராட்டங்களை.. எல்லாம் பார்க்கும்போது 'மதம் என்ற ஒன்று தேவைதானா ?' என்ற கேள்வி எழுகிறது.

விஞ்ஞானம் வளர்வதால்தான் நியூக்ளியர் பாம், பயலாஜிகல் பாம் என்று நாசகார ஆயுதங்கள் வருகின்றன! வீடு இருட்டாக இருக்கிறது, எரிச்சலுடன் கதவைத் திறந்து கொண்டு வேகமாக உள்ளே போனால், நாற்காலியும், மேஜையும் காலை இடறிவிடுகின்றன! உடனே நிதானம் இழந்து கோபப்பட்டு மேஜை, நாற்காலிகளையெல்லாம் எடுத்து வெளியே எறிவதால் பிரயோஜனம் இல்லை! நாம் இடறி விழுந்ததற்குக் காரணம் வெளிச்சமின்மை! ஆகையால் வெளியே போக வேண்டியது மேஜை அல்ல, விளக்கை ஏற்றினால் இருட்டு போய், பிரச்னைகளும் தன்னால் காணாமல் போய்விடும்.

கலவரத்தையும் குழப்பத்தையும் உண்டுபண்ணப் பிறந்தது அல்ல மதம்! 
அமைதியைக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது அது! மதம், மனிதர்களைப் பிரிப்பதற்காக உண்டாக்கப்படவில்லை! மனிதர்களை ஒன்று படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதுதான் அது!

இந்த இடத்தில் மகாத்மா காந்தியின் வாழ்கையில் நடந்த ஓர் உண்மை சம்பவம் பற்றி அவசியம் சொல்ல வேண்டும். வங்காளத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் வெட்டி, வீதிகளில் இரத்த ஆறு ஓடவிட்டுக் கொண்டிருந்த சமயம்.. நடுத்தர வயது கொண்ட ஒருவர்
மகாத்மா காலிலே விழுந்து, 'நான் பாவி! கொலை செய்துவிட்டேன் ! நிச்சயம்
நான் நரகத்துக்குதான் போவேன்!' என்று கதறி அழ ஆரம்பித்தார். விஷயம் இதுதான் மதக்கலவரத்தில் யாரோ இவரின் மகனை கொன்றுவிட்டார்கள், அதனால் இவரும் பழி வாங்க ஆத்திரத்தில் ஒரு முஸ்லிம் சிறுவனை வெட்டித் தள்ளினார். பிறகு தான், தான் செய்தது எத்தனை பெரிய பாவம் என்று எண்ணி, மகாத்மாவிடம் வந்தார்.

இப்பவும் எதுவும் கெடவில்லை, நீ சொர்க்கத்துக்குப் போக ஒரு சந்தர்ப்பம்
இருக்கிறது, என்றார் காந்திஜி இந்த மதக்கலவரத்தில் பெற்றோரை இழந்த அநாதையாகிவிட்ட ஒரு முஸ்லிம் குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்து பெரிய ஆள் ஆக்கு, அதுவே நீ செய்தபாவத்துக்கு பரிகாரம் என்றார்.

இதிலிருந்து நாம் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நாம் வேற்று மதத்தினரை கொலை செய்து விட்டு ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று தப்பாக அர்த்தம் கொள்ள கூடாது.
ஆனால், தான் செய்த தவறுக்கு உண்மையாக வருந்தி, ஒருவன் மனம்
திருந்துவானேயானால் அவர் எல்லா மதத்தினரையும் உள்ளன்போடு நேசிப்பான். 

எந்த மதமானாலும் அவை 'அயலானுக்கும் அன்பு காட்டு' என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்கிறது. அதனால் 'எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சக மனிதர்களை நான் நேசிப்பேன்! அவர்களிடத்தில் அன்பு காட்டுவேன்!' இப்படி ஒரு சபதத்தை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டால் போதும்.. மதத்தின் பெயரால் மட்டும் இல்லை, ஜாதி, இனம் என்று எந்த காரணம் கொண்டும் பிரச்னைகள் தலைதூக்காது.

--சுவாமி சுகபோதானந்தா தொகுப்பிலிருந்து.