Monday, February 27, 2012

வாழ்கை

   என் தாத்தா மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் பணியாற்றியவர். அவருடைய முக்கிய வேலை ராஜா வேட்டையாட காட்டுக்கு செல்லும்போது அவருடன் செல்வது. வேட்டையாடுவதில் என் தாத்தா திறமையானவர். அவர் கொடிய காட்டு மிருகங்களையும் சர்வசாதாரணமாக வேட்டையாடுவார் என்று சொல்வார்கள்.

தாத்தாவிடம்  என் கேள்வி.

   தாத்தா... கும்மிருட்டாக இருக்கும்போது காட்டிற்குள் வேட்டையாட போகிறீர்களே, உங்களுக்கு பயமாக இருக்காதா ? என்று சிறுவனாக இருந்த நான் அவரிடம் ஒருமுறை கேட்டேன்.

தாத்தாவின் பதில்.

   அடே பையா!... வேட்டைக்கு போவதே அந்த பயம் கலந்த கிளர்ச்சியான உணர்வுக்காகதானே. என்று சொல்லி சிரித்தார்.

   ஆமாம்... வேட்டையாட காட்டுக்கு செல்வது அவருக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு பொழுதுபோக்காகத்தான் இருந்திருக்கிறது. காடு என்பது ஒரு பயங்கரமான பிரதேசம் எந்த திசையிலிருந்து எந்த மிருகம் நம் மீது பாயுமோ? என்று கூட தெரியாது. காட்டுக்குள் வேட்டையாட செல்வது ஒரு திகிலான விஷயம் தான். என்றாலும் ஏன் வேட்டையாட போகிறீர்கள்?

   எதிர்பாராத விஷயங்களை எதிர்கொள்வதில் மனிதனுக்கு எப்போதும் ஓர் அலாதியான இன்பம் உண்டு. மகாராஜா தன் ஆட்களை அனுப்பி ஒரு புலியையோ அல்லது ஒரு சிங்கத்தையோ பிடித்து வர சொல்லி அதை மரத்தில் கட்டி வைத்து அம்பு எய்து கொள்ளமுடியும். ஆனால் அதில் என்ன சந்தோஷம், திகிலுணர்வு இருக்கிறது. "அய்யோ!... என் ஆருயிர் நண்பன் இப்படி என்னை ஏமாற்றுவான் என்று கனவிலும் நினைத்தது இல்லையே!", "செழிப்பாக ஓடும் என்று நினைத்து தொடங்கிய வியாபாரம் இப்படி ஒரேயடியாக படுத்துவிட்டதே!", "என் உயிர் காதலி என்னை ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாலே!" என்று வருத்தப்பட்டு புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை.

   வேட்டைக்கு செல்லும்போது, "இந்த புலி நான் ஏமார்ந்தபோது என் மீது பாய்ந்துவிட்டது, இது நீதி இல்லை" என்று சொல்லி நாம் புலம்பியதுண்டா?

   வாழ்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள், போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகம் பிறக்கும். ஆனந்தம் பிரவாகம் எடுக்கும்.

-சுவாமி சுகபோதானந்தா  


1 comment: