Wednesday, February 15, 2012

பழந்தமிழர் விளையாட்டுக்கள்

 விளையாட்டு என்றவுடன் மட்டைப்பந்து, உதைப்பந்து ஆகியவைதான் நம் நினைவுக்கு வருகிறது. ஏனென்றால் அவ்விளையாட்டுகளில் தான் பணம் கிடைக்கிறது. நம் நாட்டில் உண்மையான திறமைக்கு மதிப்பு இருக்கிறதா? என்றால் நிட்சயம் இல்லை என்று தான் கூறவேண்டும்.

 விளையாட்டு என்றால் என்ன? நாம் விளையாட்டை எவ்வாறு கருதுகிறோம் ? பணம் கொடுக்கும் ஒரு இயந்திரமாக நாம் கருதி வருகின்றோம். பணத்திற்காக விளையடுபவர்களே இன்றைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளனர் இந்நிலையில் நம் நாடு எப்படி ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்லும்?

 சீனா போன்ற நாடுகளில் திறமைக்குத் தான் மதிப்பளிக்கிறார்கள். குழந்தைகளைப் பள்ளியிலேயே சென்று அவர்களின் திறமையை அறிந்து அவர்களின் திறமையை வளர்க்கிறார்கள். அதனால் அந்த நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

 ஆனால் பழந்தமிழர் (ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்) பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். உடலையும் மனதையும் நலமாக வைத்திருந்தனர். விளையாட்டு என்பது பொழுது போக்க மட்டும் பயன்படுவதில்லை மாறாக உடலையும், மனதையும் நலம் பெறச் செய்வதாக கொண்டு அதை ஒரு நெறியாக மதித்து வந்தனர்.

பழந்தமிழர்கள் மரபு வழி வந்த விளையாட்டுக்கள் சில காண்போம் 


1.அசதியாடல்(இருபாலர்) நகைச்சுவையாகப் பேசி மகிழ்தல்.

2.அம்புலி அழைத்தல்(இருபாலர்) நிலாவை அழைத்து விளையாடுதல்.

3.அலவன் ஆட்டல்(இருபாலர்) நண்டைப் பிடித்து       விளைளயாடுதல்.

                   
 4.உலாவல்(இருபாலர்) இயற்கையான சூழலில் நடந்து செல்லுதல்.

 5.ஊசல்(இருபாலர்) மரத்தில் கயிறு கட்டி முன்னும் பின்னும் ஆடி விளையாடுதல்.

 6.எதிரொலி கேட்டல்(பெண்) மலைப்பகுதிகளில் ஒலி எழுப்பித் திரும்பிக் கேட்கும் ஒலி கேட்டு விளையாடுதல்.

7.எண்ணி விளையாடல்(இருபாலர்) ஒன்று,இரண்டு என்று மரத்தையோ,நாவயையே,விலங்குகளையோ எண்ணி பொழுது போக்காக ஆடுதல்.


8.ஏறுகோள்(ஆண்) மாடு பிடித்தல். இன்று ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு,ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் வலிமையான மாட்டைப் அடக்குபவனையே பெண்கள் திருமணம் செய்து கொண்டனர்.

"கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" என்கிறது கலித்தொகை வலிமையான காளையை அடக்கிய ஆடவனையே சங்க காலமகளிர் திருமணம் செய்து கொண்டனர். அவ்வாறு காளையை அடக்க முடியாத ஆடவனை அடுத்த மறுபிறவியிலும் விரும்ப மாட்டேன் என்கிறாள் இந்தப் பெண்.

9.கண் புதைத்து விளையாடல்(பெண்) இன்று கண்ணாமூச்சி என்று இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது

10.கவண்(பெண்) கிளைத்த கம்புகளில் வாரைக்கட்டி அதில் கல்லை வைத்து எறிந்து விளையாடுதல்.

11.கழங்கு(பெண்) சொட்டாங்கி என்று கிராமங்களில் இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது.

 12.குதிரையேற்றமும், யானையேற்றமும்(ஆண்)
குதிரை, யானை ஆகியவற்றை அடக்குவதாகவும், தம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதாகவும் இவ்விளையாட்டு அமைந்தது.

13.குரவை(பெண்) இது ஒரு வகையான கூத்து. பெண்கள் ஆடுவது மரபு.

14.சாம விளையாட்டு(ஆண்) இரவில் ஆண்கள் விளையாடும் விளையாட்டு.

15.குறும்பு விளையாட்டு (இருபாலர்) நகைச்சுவையாக விளையாடுவது.

16.சிறுசோறு(பெண்) பெண்கள் சோறு சமைப்பது போல விளையாடுவது.

17.சிறுதேர்(ஆண்) முக்காற்சிறு தேர் உருட்டி விளையாடுவது.

18.சிறுபறை(ஆண்) பறை என்பது தோலால் ஆன இசைக்கருவி. இதனை இசைத்து மகிழ்வது இவ்விளையாட்டாகும்.

19.சிற்றில் சிதைத்தல்.(ஆண்) பெண்கள் கட்டிய சிறு வீட்டை ஆண்கள் இடித்து விளையாடுவது.

20சுண்ண விளையாட்டு(பெண்) நறுமணம் வீசும் பல நிறப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடுவது.
 
 21.சூது(இருபாலர்) ஏதாவது ஒரு பொருளை ஈடாக வைத்து விளையாடுவது.

22.செடி கொடி வளர்ப்பு(பெண்) சங்க கால மக்கள் இயற்கையோடு இயைபுற்று வாழ்ந்தார்கள். செடி கொடி வளர்ப்பதையே பெண்கள் ஒரு விளையாட்டாகச் செய்தனர்.

23.நீர் விளையாட்டு(இருபாலர்) நீரில் குதித்து விளையாடுதல், அங்கு வரும் நண்டுகளைப் பிடித்து விளையாடுதல்.

24.பந்து(இருபாலர்) பந்தினை வைத்து பல்வேறு விளையாட்டுகளை விளையாடினர்.

25.பறவைகளைக் காணுதலும் அவற்றைப் போலச் செய்தலும்(இருபாலர்)

 மொழியின் தோற்றக்கூறுகளுள் போலச் செய்தலும் ஒன்றாகும். சங்ககாலத்தில் பெண்கள் பறவைகளைக் கண்டு அவற்றின் ஒலியைப் போலச் செய்து மகிழ்ந்தனர்.
 
 26.பறவை வளர்ப்பும் விலங்கு வளர்ப்பும்(பெண்) பறவை, விலங்குகளை வளர்ப்பதை சங்க கால மகளிர் ஒரு விளையாட்டாகவே கொண்டிருந்தனர்.

27.பறவை விலங்குகளுடன் விளையாடுதல்(இருபாலர்) பறவை, விலங்குகளோடு விளையாடுவதை இருபாலரும் விளையாட்டாகக் கொண்டனர்.

28.பாவை விளையாட்டு(பெண்) பொம்மை போல செய்து விளையாடுவது.

29.பிசி நொடி விளையாட்டு(பெண்) விடுகதை கூறி விளையாடுவது.

30.மணற்குவியலில் மறைந்து விளையாடல்(பெண்)
பெரிய மணற்குவியல்களில் மறைந்து ஒருவரை ஒருவர் கண்டு விளையாடினர்.

 31.மலர் கொய்தலும் மாலை தொடுத்தலும்(பெண்)
பல விதமான மலர்களையும் கொய்து மாலையாக்கி மகிழ்ந்தனர்.

32.மல்(ஆண்) ஆடவர் இருவர் ஒருவரை ஒருவர் தம் வலிமையால் அடக்க முற்படுதல் இவ்விளையாட்டின் அடிப்படையாகும்.



33.வட்டு (ஆண்) வட்டமான இரும்பு போன்ற பொருளை எறிந்து விளையாடுதல்.

34.வள்ளை(பெண்) பெண்கள் கூடி பாடல் பாடி ஆடுவது இவ்விளையாட்டின் பண்பாகும்.

35.வில் விளையாட்டு(ஆண்) நரம்பால் செய்த வில்லை குறிவைத்து எறிந்து விளையாடுவது. வில்லில் இருந்து எழுந்த ஒலியே யாழ் என்னும் இசைக்கருவி தோன்றக் காரணமானது. யாழுள் வில்யாழ் என்னும் ஒரு யாழும் உண்டு.

 36.வேட்டை. (ஆண்) விலங்குகளை வேட்டையாடித் தம் வீரத்தை வெளிப்படுத்துவதாக இவ்விளையாட்டு அமைகிறது.




   பழந்தமிழரின் விளையாட்டுச் சுவடுகள் இன்றும் பல வடிவங்களில் உள்ளன. இவற்றைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள, சங்க இலக்கிய விளையாட்டுக் களஞ்சியம் என்னும் நூலைக் காணலாம்.

  மேலும் பழந்தமிழர் விளையட்டுக்கைளை பற்றி அறிய கீழ் உள்ள தொடுப்பை சொடுக்கிடவும்.

2 comments:

  1. Nala iruku........sangakalathu vilayatukala sonathuku nandri.......

    ReplyDelete
  2. அருமை சகோ

    ReplyDelete